Tuesday, September 28, 2010

பாதியில் முடிந்த கதை !

பழம்பெரும் நடிகரின் பெயரை சொல்லி பெய்யத்துவங்கியது மழை. செயற்கை பூக்கள் பூக்கத்தொடங்கின. சிலர் அந்த பூக்களுக்குள் அடைக்கலம் புகுந்து நகரத்துவங்கினர். பாதையோரக் கடைகளின் கூரைகளின் கீழ் இடம்தேடி ஓடினர் இன்னும் சிலர். சாலையோரம் சேறாக மாறிக்கொண்டிருந்தது. சலவைத்தூள்களுக்கு சவால் விட தம்மை தயார் படுத்திக்கொண்டிருந்தனர் சில பள்ளிச்சிறார். அந்த மழையிலும் ஐஸ்கிரீம் குடித்துக்கொண்டிருந்தனர் இன்னும் சிலர். மரங்கள் தம்மைக்குலுக்கி குதூகளிக்கத்துவங்கின. சாலையில் தேங்கியிருந்த நீரைப்பிரித்துகொண்டு வந்துகொண்டிருந்தது அந்த மோட்டார் சைக்கிள். மழை நீர் நனைக்குமுன் ஒதுங்கிவிட்டோம் என பெருமைப்பட்டுக் கொண்டிருந்தவர்களை நனைத்த பெருமையோடு அவர்களின் சாபத்தையும் கேட்க நேரமின்றி தெரு முனையை நோக்கி விரைந்துகொண்டிருந்தது அந்த சைக்கிள்.

வசீகரன் என்ற பெயருக்கு ஏற்றவன் போல் இருந்தான் அந்த சைக்கிளை ஒட்டிக்கொண்டிருந்த அவன். தியேட்டரில் படம் துவங்க இன்னும் 10 நிமிடங்களே இருந்தன. கடிகார செக்கன் முள்ளுக்கு போட்டியாக வண்டியை ஒட்டிக்கொண்டு தெரு முனையை நோக்கி விரைந்துகொண்டிருந்தவன் அப்போது தான் அதை கவனித்தான். சிக்னலில் பச்சை நிறம் காலாவதியாக இன்னும் 2 செக்கன்களே இருந்தன. வேகமாக வலக்கை பிடியை முறுக்கத்துவங்கியும் தோற்றுப்போனான். திடீரென அவன் அடித்த பிரேக் அவனுக்கு சார்பு வேகத்தின் செயன்முறை விளக்கத்தை சொல்லிக்கொடுத்தது.

அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு இரண்டு நிமிடங்கள் எடுத்தான் ஆனந்த். அவசரமாக ரயிலைப்பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவன் ஆர்வக்கோளாரில் பாதையைக் கடக்க முயன்று இப்போது வசீகரனின் வண்டிக்கு முன்னால் நின்று கொண்டிருந்தான். ஒரு அங்குலம் கடந்திருந்தாலும் இப்போது அவனது புகைப்படம் அவன் வீட்டுச்சுவரில் தொங்கிக்கொண்டு இருந்திருக்கும். ஏதோ வசீகரன் நான்கு வருடங்களாக சைக்கிள் ரேசில் ஓடிப்பழகிய அனுபவமும் லாவகமும் அவனை காப்பாற்றியிருந்தது.

அந்த இடம் அமைதியாக இருந்தது. இருவருக்கும் வார்த்தை வர மறுத்தன. தன் தவறை  உணர்ந்துகொண்ட ஆனந்த் இனியும் அவ்விடத்தில் இருக்க இஷ்டமின்றி பாதையை விரைவாக கடந்து மறுகரையை அடைந்தான். அப்போது ஒரு பெண் அவனை கடந்து சென்றாள்.

கவிதா ஒரு அழகிய கவிதையே தான். அவளைப் பார்த்ததும் விக்கித்து திக்கித்து சற்றுமுன் தான் சந்தித்த அதிர்ச்சிக்கு எவ்வாறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தினானோ அதற்கு கொஞ்சமும் குறைவில்லாது உணர்ச்சிகளையும் பாவங்களையும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கொண்டிருக்க அதைக்கண்ணுற்றும் கணக்கின்றி தன் செல்பேசியில் கொஞ்சு தமிழ் பேசிக்கொண்டு அவனை கடந்து சென்றுகொண்டிருந்தாள் 

என்று கூகிள் transliteration  இல் கதை வளர்ந்துகொண்டிருக்கும் போது ஏதோ ஒரு கோளாறில் உலாவி இயங்க மறுத்து மீண்டும் refresh பண்ணும்போது எழுதியவை அழிந்துபோயிருந்தன...!

No comments:

Post a Comment