Thursday, December 23, 2010

மன்மதன் அம்பு

இன்னொரு படத்தின் முதல் நாள் முதல் காட்சி. முதல் ஆச்சரியமாக படத்தின் தலைப்பு எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி சாதாரணமாக காண்பிக்கப்பட்டது. அடுத்த ஆச்சரியம் சூர்யா.

கதை திரைக்கதை வசனம் பாடல்கள் என ஏகப்பட்ட சுமைகளை சுமந்ததாகவே தெரியவில்லை உலகநாயகன். அவ்வளவு சாமர்த்தியமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது திரைக்கதை.

கதையை சொல்லுவதற்கு இஷ்டமில்லை ஏனெனில் சுவாரஷ்யம் இல்லாதுவிடும். ஆனாலும் ஒரு சில பாத்திரங்களை மட்டுமே கொண்டு படைக்கப்பட்ட படம் என்னைக் கவர்ந்தது. முதல் பாதியில் அவ்வளவாக சுவாரஷ்யங்கள் இல்லையெனினும் இடைவேளையின் பின்னர் சிரிப்புக்கு உத்தரவாதம். ஆனால் எனக்கிருக்கும் சந்தேகம் எல்லோருக்கும் இரண்டாம் பாதியும் அதில் வரும் நகைச்சுவையும் புரியுமா என்பதுதான். வசனங்கள் கமல் என்பதால் ஒரு ஜோக்குக்கு சிரிச்சாலும் தொடர்ந்து வரும் ஜோக்குகளை தவறவிடும் அபாயம் இதிலும் தொடர்கிறது.

அவருக்கே உரிய கருத்துக்கள் இடையிடையே தூவப்பட்டு ரசிக்க வைக்கின்றன. சர்ச்சையில் சிக்கியதாக சொல்லப்படும் கவிதை காட்சி தான் என்னைப்பொறுத்தவரை கதையின் இதயம் என்பேன்.படத்தோடு கேட்கும்போது கமலின் வரிகளில் தான் எத்தனை உண்மை எத்தனை வலிமை. எழுத்தாளர் கமலிடம் இன்னும் எதிர்பார்க்கிறேன். நீலவானம் பாடல்காட்சி ஒரு வித்தியாசமான எல்லோரும் பார்க்க வேண்டிய அதே நேரம் உணர்வுகளை தூண்டக்கூடிய பாடல். ஒரே பாடலில் கடந்த காலத்தை ரீவைண்ட்  செய்து காட்டிய எண்ணத்திற்கு ஒரு சபாஷ். தகிடுதத்தோம் பாடல் ஒன்றே கதையை சொல்லிவிடும்:) இன்னும் நிறைய எழுதலாம் ஆனால் கதை வெளிவந்துடும். அதனால நான் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறேன்.

மாதவனுக்கு தான் அதிகமாக நடிக்க இருக்குதுபோல ஏன்னா அவருதான் படத்துல முக்கால்வாசி நேரம் தண்ணில மிதக்குறாரு. அதுவும் தண்ணில மிதக்கும் நகரத்துல அவரு தண்ணில மிதக்குற காட்சிகள் அருமை. mr & mrs kurup  நல்ல முயற்சி. ஊர்வசியின் நடிப்பு சொல்லவே வேண்டியதில்ல. ரமேஷ் அரவிந்த் தானா அதுன்னு கண்டுபுடிக்கவே முடியல.

எப்போதும் போல கமலோட நடிப்பு அவ்வளவு இலகுவா யாரால முடியம், த்ரிஷாவோட தமிழும் குரலும் அழகு. சங்கீதாவும் தான் பாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார். இதில் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது அந்த  MSC cruise.  ஒரு அழகிய கப்பல்...

இன்னொரு விஷயம் மறந்தே போயிட்டேன் அந்த சின்ன பையன். சங்கீதாவோட மகனா நடிக்கிற பையன் நல்ல ஒரு எதிர்காலம் இருக்கு. இலங்கைத்தமிழ் பேசும் ஒரு குடும்பம் இருக்கு, நீண்ட நாளைக்கு பிறகு இந்திய சினிமாவில் உண்மையா இலங்கைத் தமிழ் பேசும் ஒரு ஜோடி.

லைவ் ரெக்கார்டிங் முறையில் பதிவு செய்யப்பட்ட  படம், உண்மையாகவே அதில் உள்ள சிரமங்கள் தெரியவில்லை.. அந்தளவு நேர்த்தி..தேவிஸ்ரீ பிரசாத் பின்னணியில கலக்கிட்டாரு. ஒளிப்பதிவு யாருன்னு ஞாபகம் இல்ல ஆனால் நல்லா இருந்துச்சு.ஒரே கவலை கடைநிலை ரசிகனுக்கு இந்த படம் புரியுமா, புடிக்குமா என்பதுதான். நீலவானம்,தகிடுதத்தோம்  பாடல் தவிர மற்ற பாடல்கள் எல்லாம் பின்னணி.வேற என்ன சொல்ல எல்லாரும் போய் படத்த பாருங்க...சந்தோசமா இருங்க.. நானும் கண்டிப்பா இன்னொரு தடவை பார்க்கணும்.

Tuesday, December 21, 2010

பள்ளிக்கவிதை

பழைய புத்தகங்களை கிளறும்போது கைக்கு கிடைச்ச ஒரு கவிதை......ப்லொக்கில போடலாம்னு நினைச்சேன்...ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது எழுதினது... வாசிச்சு பார்த்துட்டு எப்புடி இருக்குதுன்னு சொன்னா சந்தோசமா இருக்கும் :)

காலையிலே பொய் சொல்லி
தலையிலே குட்டு வாங்கி
மூலையிலே உட்கார்ந்து
அலையலையாய் கண்ணீர்விட்டு

மதியவேளை வீடுசென்று
வேலைகளை முடித்துக்கொண்டு
கட்டிலுக்கு சென்றால்
கண்ணை சொக்கும் தூக்கம்

மாலையிலே எழுந்து - பள்ளி
வேலைதனை செய்யப்போனால்
தொலைகாட்சி பார்க்கும் எண்ணம்
தலைமேல் தோன்றும்....

தொலைக்காட்சி பார்த்துவிட்டு
பள்ளிவேலை செய்யாமல்
புதுப்புது கனவுகான
படுக்கைக்கு சென்றிடுவேன்

அதிகாலை எழுந்து
பள்ளிவேலை செய்யவென்றால்
காலையில் எழும்போது
கதிரவன் கிழக்கில்

பள்ளியிலே முதல் பாடம் - ஆசான்
வீட்டுப்பாடம் எங்கே என்றால்.....
( மீண்டும் முதல்வரியில் தொடங்கவும்)

Saturday, October 2, 2010

எந்திரன்

இப்போ வரும் அப்போ வரும்னு ரொம்ப நாளா காக்க வச்சு கடைசியா வெளில வந்திடுச்சு நம்ம தலைவர் படம். அது ஏனோ தெரியல ரஜினி படம்னா மட்டும் எனக்கு எல்லாமே மறந்து அவரோட கடை நிலை ரசிகனா மட்டுமே இருந்து அவரை ரசிக்க தோணுது...

ஒரு படம்னு வந்துட்டா அது ரஜினிக்காக மட்டும்தான் பார்க்கிறேன்னு நான் சொல்ல வரல.. அப்பிடி பார்க்கிறதுன்னா அவரோட புகைப்படங்கள மட்டுமே பார்க்கலாமே...ஆனா இந்த படத்துல எனக்கு அவர் மட்டும்தான் தெரிஞ்சார்..(அதுக்காக அவர் நூறு ரஜினியா வந்ததால வேற யாரையும் பார்க்க முடியல அப்புடின்னு நான் சொல்லல)

கொன்கோர்ட் தியேட்டர்ல முட்டி மோதி தலைவர் பட டிக்கெட் வாங்குற அனுபவமே ஒரு அலாதி இன்பம். அத அனுபவிச்சா தான் புரியும்..அப்படி பார்க்க போன எனக்கு தலைவருக்கு intro  இல்லாம போனது கொஞ்சம் வருத்தம் தான் ஆனாலும் படம் பார்த்து முடியும் போது அந்த வருத்தம் எனக்கு தெரியல.
ரஜினி கண்டுபிடிக்கிற எந்திரனுக்கு உணர்வுகளை ப்ரோக்ராம் பண்ணுறது அதனால் சந்திக்கிற விளைவுகளும் தான் கதை. அதை ஷங்கர் எடுத்திருக்கும் விதம் ஷங்கரால் மட்டுமே முடிந்த வித்தை. ஆரம்பத்தில ரோபோ செய்யும் குறும்புகள் வெகுவாக ரசித்தேன். முக்கியமா மனுஷன் கிட்ட இருக்கிறது ரோபோ கிட்ட இல்லாதது அப்புடின்னு சந்தானம் வம்புக்கு இழுத்தது...(அதுதான் feeling) ரோபோ அதை அப்பிடியே விஞ்ஞானி ரஜினிகிட்ட ரோபோ கேக்குறது அப்படி அங்கங்க நகைச்சுவை சாரல். சுஜாதாவோட வசனங்கள் இந்த படத்தில சுஜாதா பாதியில் இல்லாமல் போனது தெரிஞ்சது.

என்னை பொறுத்தவரை ஒரு இயந்திரனுக்காக கவலைப்பட வைத்ததும் பின்பு கோபப்பட வைத்ததும் மீண்டும் இறுதியில் கவலைப்பட வைத்ததும் என ஷங்கரின் திரைக்கதை வித்தை காட்டியிருக்கிறது..இடைவேளைக்கு பின் வரும் காட்சிகளில் நான் ஒன்றிப்போனது  எனக்கு புரிந்தது எப்போதென்றால் என் பின் இருக்கையில் அமர்ந்தவர்கள் என்னை சாய்ந்து உட்காரும் படியும் அவர்களால் பார்க்க முடியவில்லை என்றும் சொன்ன போதுதான்.

தீ விபத்தின்போது ரோபோ காப்பாற்றும் காட்சிகளாகட்டும், ரஜினி ரோபோவை அழிக்கும் காட்சிகளாகட்டும், ரோபோ ஐஷுக்காக நகை வாங்கும் காட்சிகளாகட்டும், இறுதியில் வில்லனாக மாறிய பின் வரும் காட்சிகள் எல்லாம் என் மனதை ஏதோ செய்தன என்பது உண்மை. ரஜினி ரோபோவாக இருந்ததால நான் பீல் பண்ணினேனா இல்லாட்டி ரோபோவுக்காக பீல் பண்ணினேனா அப்பிடியெல்லாம் ஆராஞ்சு பார்க்க இஷ்டமில்லை. இன்னொரு விஷயம் ரஜினியை தவிர இந்த படத்துக்கு வேற யாரும் பொருத்தமா இருந்திருப்பாங்கன்னும் எனக்கு தோனல.

கொஞ்சம் இங்கிலிஷு படம் பார்க்கிறவங்க வேணுமெண்டா இது அந்த படம் மாதிரி, இந்த படம்  மாதிரி அப்புடின்னு சொல்லலாம். அந்த அதிமேதாவிங்களுக்கு நான் சொல்லுறது என்னான்னா எந்த படமும் இந்த படம் மாதிரி இல்லை. தலைவர் தனியா கலக்கி இருக்காரு. ஆனால் என்னை ஏமாற்றிய விஷயம் பாடல்கள். ஷங்கர்கிட்ட இருந்து இன்னும் வித்தியாசமா பாடல்களை எதிர்பார்த்தேன்..அவர் முன்னைய படங்களில் பாடல்களுக்கு எடுத்த சிரத்தையை விட இதற்கு கொஞ்சம் குறைவு என்று தான் தோன்றுகிறது. ஒருவேளை படக்காட்சிகளில் அவர் கவனத்தை செலுத்தியதால் இதை கவனிக்காது விட்டிருந்திருக்கலாம்.

ஒவ்வொரு மனுஷனுக்கும் ரசனை வேறுபடும், என்னை பொறுத்தவரை இந்த படம் கண்டிப்பா ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்தும். சந்திரமுகியில எப்புடி கடைசியா வேட்டையனா வந்து கலக்குவாரோ அப்பிடியே தான் இங்க வில்லன் ரோபோ. அந்த படத்தை ரசிச்ச ரசிகர்கள் கண்டிப்பா இந்த படத்தையும் ரசிப்பாங்க.

படத்தில பின்னணி இசை சொல்லவே தேவையில்ல, நம்ம ரஹ்மான் கலக்கிட்டாரு. ஒளிப்பதிவு ரத்னவேலுவுக்கு இது ஒரு மைல் கல். அந்தோணியின் படத்தொகுப்பு விறுவிறுப்பை  கூட்டியிருக்கு. படம் பார்த்துகொண்டிருக்கும்போது ஒரு சில இடங்களில் நான் மட்டுமே சிரித்துக்கொண்டிருந்தேன். அப்போ தான் புரிஞ்சுது அது கொஞ்சம் technical related அதுதான் நிறைய பேருக்கு புரியலன்னு.கிளைமாக்ஸ் ல ரோபோக்கள் magnetic force உதவியோட ஒன்னு சேர்ந்து தாக்கும்போது விஞ்ஞானி worm அனுப்புறதும் பிறகு magnetic force disable பண்ணுறதும் நிறைய பேருக்கு புரியல போல. ஏன்னா பின்னால ஒருத்தன் சொன்னது கேட்டுச்சு என்னடா 2 முறையும் ரோபோ சாகலையான்னு. அதை கொஞ்சம் ஷங்கர் தவிர்த்திருக்கலாம், ஆனால் அது முடியாத காரியமுன்னு தெரியும். எது எப்படியோ படத்தை இன்னும் குறைஞ்சது 2 தடவையாவது பார்க்க சொல்லுது மனசு. அப்படி பார்த்தா  இன்னும் விஷயங்கள் ரசிக்கலாம்.

படம் கண்டிப்பா போய் தியேட்டர் ல பாருங்க. இன்னும் எழுத நிறைய விசயம் இருக்கு..பார்ப்போம் அடுத்த ஷோ பார்த்துட்டு தொடருறேன்..!

Tuesday, September 28, 2010

பாதியில் முடிந்த கதை !

பழம்பெரும் நடிகரின் பெயரை சொல்லி பெய்யத்துவங்கியது மழை. செயற்கை பூக்கள் பூக்கத்தொடங்கின. சிலர் அந்த பூக்களுக்குள் அடைக்கலம் புகுந்து நகரத்துவங்கினர். பாதையோரக் கடைகளின் கூரைகளின் கீழ் இடம்தேடி ஓடினர் இன்னும் சிலர். சாலையோரம் சேறாக மாறிக்கொண்டிருந்தது. சலவைத்தூள்களுக்கு சவால் விட தம்மை தயார் படுத்திக்கொண்டிருந்தனர் சில பள்ளிச்சிறார். அந்த மழையிலும் ஐஸ்கிரீம் குடித்துக்கொண்டிருந்தனர் இன்னும் சிலர். மரங்கள் தம்மைக்குலுக்கி குதூகளிக்கத்துவங்கின. சாலையில் தேங்கியிருந்த நீரைப்பிரித்துகொண்டு வந்துகொண்டிருந்தது அந்த மோட்டார் சைக்கிள். மழை நீர் நனைக்குமுன் ஒதுங்கிவிட்டோம் என பெருமைப்பட்டுக் கொண்டிருந்தவர்களை நனைத்த பெருமையோடு அவர்களின் சாபத்தையும் கேட்க நேரமின்றி தெரு முனையை நோக்கி விரைந்துகொண்டிருந்தது அந்த சைக்கிள்.

வசீகரன் என்ற பெயருக்கு ஏற்றவன் போல் இருந்தான் அந்த சைக்கிளை ஒட்டிக்கொண்டிருந்த அவன். தியேட்டரில் படம் துவங்க இன்னும் 10 நிமிடங்களே இருந்தன. கடிகார செக்கன் முள்ளுக்கு போட்டியாக வண்டியை ஒட்டிக்கொண்டு தெரு முனையை நோக்கி விரைந்துகொண்டிருந்தவன் அப்போது தான் அதை கவனித்தான். சிக்னலில் பச்சை நிறம் காலாவதியாக இன்னும் 2 செக்கன்களே இருந்தன. வேகமாக வலக்கை பிடியை முறுக்கத்துவங்கியும் தோற்றுப்போனான். திடீரென அவன் அடித்த பிரேக் அவனுக்கு சார்பு வேகத்தின் செயன்முறை விளக்கத்தை சொல்லிக்கொடுத்தது.

அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு இரண்டு நிமிடங்கள் எடுத்தான் ஆனந்த். அவசரமாக ரயிலைப்பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவன் ஆர்வக்கோளாரில் பாதையைக் கடக்க முயன்று இப்போது வசீகரனின் வண்டிக்கு முன்னால் நின்று கொண்டிருந்தான். ஒரு அங்குலம் கடந்திருந்தாலும் இப்போது அவனது புகைப்படம் அவன் வீட்டுச்சுவரில் தொங்கிக்கொண்டு இருந்திருக்கும். ஏதோ வசீகரன் நான்கு வருடங்களாக சைக்கிள் ரேசில் ஓடிப்பழகிய அனுபவமும் லாவகமும் அவனை காப்பாற்றியிருந்தது.

அந்த இடம் அமைதியாக இருந்தது. இருவருக்கும் வார்த்தை வர மறுத்தன. தன் தவறை  உணர்ந்துகொண்ட ஆனந்த் இனியும் அவ்விடத்தில் இருக்க இஷ்டமின்றி பாதையை விரைவாக கடந்து மறுகரையை அடைந்தான். அப்போது ஒரு பெண் அவனை கடந்து சென்றாள்.

கவிதா ஒரு அழகிய கவிதையே தான். அவளைப் பார்த்ததும் விக்கித்து திக்கித்து சற்றுமுன் தான் சந்தித்த அதிர்ச்சிக்கு எவ்வாறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தினானோ அதற்கு கொஞ்சமும் குறைவில்லாது உணர்ச்சிகளையும் பாவங்களையும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கொண்டிருக்க அதைக்கண்ணுற்றும் கணக்கின்றி தன் செல்பேசியில் கொஞ்சு தமிழ் பேசிக்கொண்டு அவனை கடந்து சென்றுகொண்டிருந்தாள் 

என்று கூகிள் transliteration  இல் கதை வளர்ந்துகொண்டிருக்கும் போது ஏதோ ஒரு கோளாறில் உலாவி இயங்க மறுத்து மீண்டும் refresh பண்ணும்போது எழுதியவை அழிந்துபோயிருந்தன...!

Friday, September 24, 2010

ஏதாவது போடுங்க சார்.....!சூரியன் உச்சந்தலையில் ஸ்ட்ராவை போட்டு மனுசன்கிட்ட இருக்கிற சக்தியை எல்லாம் உறிஞ்சுற மாதிரி அப்பிடி ஒரு வெயில்...வியர்த்து விறுவிறுத்து நா வறண்டு தண்ணி தண்ணி என்று தண்ணி கேக்குற அளவுக்கு அலைஞ்சு திரிஞ்சு பம்பலபிட்டி mc க்கு முன்னால பெரேரா அண்ட் சன்ஸ்
 ஓரமாக ஒதுங்கினான் அரவிந்த்.....வெள்ளைக்காரன் ஏதோ குளிருக்கு தாக்கு பிடிக்க முழுக்கை ஷர்ட், அதை இறுக்கி பிடிக்க ஒரு டை கண்டுபிடிச்சிருப்பான்...அத இந்த வேகாத வெயிலில போட்டு திரியுற கொடுமையையும் போதாததற்கு அனுபவித்துக்கொண்டிருந்தான்...முகத்தை கழுவினாக்கூட இவ்வளவு தண்ணீர் முகத்துல ஒட்டியிருந்து பார்த்திருக்க முடியாது....அவ்வளவு வியர்வை.....என்னத்த சொல்லுறது...சேல்ஸ் ரெப் அப்படின்னு சொன்னாலே நாய் பொழைப்பு தானே.... கையில இது போதாதுன்னு ஒரு பெரிய பை...அதுவே ஒரு 5 கிலோ  பாரமிருக்கும்...அதுக்குள்ளே இருக்கிற லொட்டு லொசுக்கு சாமான்கள வீடு வீடா போய் வித்தா தான் இவனுக்கு சாப்பாடு.....யார் மூஞ்சில முழிச்சானோ....இதுவரைக்கும் அன்றைய நாளில ஒன்னும் தேரல....!

மாசக்கடைசி .....பொருளாதாரமும் ரொம்ப வீக்கு...... டார்கெட் அது இதுன்னு மேனேஜர் அடிக்கடி கண்ணு முன்னால வந்து பயமுறுத்துற காட்சிகளையும் இடைநடுவே அனுபவித்துக்கொண்டிருந்தான் அவன்....ஒரு கூல்ட்ரின்க் குடிச்சா நல்லா இருக்குமே எண்டு யோசிச்சவனுக்கு பாக்கெட்டில் கையை விட்டு பார்த்ததும் ஏமாற்றமே மிஞ்சியது.....அடடடா...20 தானே இருக்கு.......அதிலையும் பத்து ரூபா கண்டிப்பா பஸ்சுக்கு வேனும்....இன்னும் 10  ரூபாக்கு குடிக்கிறதுக்கு  வாங்கிற பொருள் ஒண்ணுமே இலங்கை பொருளாதாரதுலையே இல்ல..... இப்படி கண்ணா பின்னான்னு யோசிச்சுகொண்டிருக்கும்போதே ஒரு சின்னப்பெண் அவன் முன்னாள் வந்து கையை நீட்டினாள்.
" என்னது" ?
"எதாவது போடுங்க சார்" சிறுமி சொன்னாள்..
" ஒண்ணுமில்ல போ  "
அவள் போகாமல் மீண்டும் தொந்தரவு பண்ணிக்கொண்டே இருந்தாள்
அந்த நேரம் பார்த்து ஒரு அழகிய பெண் அந்த பக்கம் வந்து அவனருகில் நின்றாள்.. யாருக்காகவோ காத்துக்கொண்டிருப்பது போல் தோன்றியது.....

" அண்ணா அண்ணா எவ்வளவாவது போடுங்க அண்ணா " சிறுமி சத்தத்தை அதிகரித்தாள்... திடீரென காலிலும் விழுந்தாள்...
என்னா டெக்னிக்கா பிச்சை கேக்குறாப்பா...என்று மனதில் நினைத்துக்கொண்டவனுக்கு இப்போ அருகில் ஒரு பெண் இத பார்த்துக்கொண்டிருப்பது அவன் தன்மானத்தை தூண்டியது....

"சரி சரி எழும்பு....இந்தா புடி " என்று கொடை வள்ளலானான்...
அந்த சிறுமியும் 20  ரூபாவை வாங்கிக்கொண்டு அந்த பெண்ணை நோக்கி சென்றாள்

அந்த பெண் காத்திருந்தது இன்னொரு பையனுக்காக...
அந்தச்சிறுமி அப்பெண்ணிடம் போய் கையை நீட்டும் தருணத்தில் அவளது ஆள் அங்கு வந்து சேர்ந்தான்...உடனே அவள் அவனது காலிலும் விழுந்தாள்....
அந்தப் பையன் ஒரு 5  ரூபாவை எடுத்து அவளிடம் கொடுக்க முனைகையில் அந்தப்பெண் தடுத்தாள்....
" ( மேகிட தென் தமாய் அர கொல்லா 20 துன்னே ) இவளுக்கு இப்போ தான் அந்த பொடியன் 20  குடுத்தான்....
(மேகி பொரு கியன்னே) இவா போய் சொல்லுறா..." என்று அவன் கொடுக்க நினைத்ததையும் தடுத்து அவனை பெரேரா அண்ட் சன்ஸ் உள்ளே கூட்டிட்டு போனாள்

ஆஹா அநியாயமா 20 ரூபா போச்சே...எனக்கு இந்த வறட்டு கௌரவம் தேவையா என அரவிந்த் நொந்து கொண்டிருக்கும் போதே....அந்த சிறுமி கடையினுள் நுழைந்தாள்... ஆஹா நிறைய ஜோடி உள்ளே இருக்காங்க இவளுக்கு செம வேட்டை தான் இன்னைக்கு என்று நினைத்துக்கொண்டு உள்ளே என்ன நடக்குதெண்டு பார்க்கத்திரும்பினான்.....

அந்தச்சிறுமி ஒரு நூறு ருபாய் நோட்டை நீட்டி....ஒரு மைலோவும் ஒரு சாக்லேட் கேக்கும் வாங்கி வெளியே வந்தாள்....
அரவிந்த்தை கண்டு சின்னதாக ஒரு புன்னகையை தூவிவிட்டு நடந்தாள்...
அரவிந்து....அப்புடியே ஷாக் ஆகிட்டான்.....அவன் அதிலிருந்து மீள்வதற்கு ஒரு சின்னப் பையனின் கை உதவியது....

" ஏதாவது போடுங்க சார்...."