Saturday, October 2, 2010

எந்திரன்

இப்போ வரும் அப்போ வரும்னு ரொம்ப நாளா காக்க வச்சு கடைசியா வெளில வந்திடுச்சு நம்ம தலைவர் படம். அது ஏனோ தெரியல ரஜினி படம்னா மட்டும் எனக்கு எல்லாமே மறந்து அவரோட கடை நிலை ரசிகனா மட்டுமே இருந்து அவரை ரசிக்க தோணுது...

ஒரு படம்னு வந்துட்டா அது ரஜினிக்காக மட்டும்தான் பார்க்கிறேன்னு நான் சொல்ல வரல.. அப்பிடி பார்க்கிறதுன்னா அவரோட புகைப்படங்கள மட்டுமே பார்க்கலாமே...ஆனா இந்த படத்துல எனக்கு அவர் மட்டும்தான் தெரிஞ்சார்..(அதுக்காக அவர் நூறு ரஜினியா வந்ததால வேற யாரையும் பார்க்க முடியல அப்புடின்னு நான் சொல்லல)

கொன்கோர்ட் தியேட்டர்ல முட்டி மோதி தலைவர் பட டிக்கெட் வாங்குற அனுபவமே ஒரு அலாதி இன்பம். அத அனுபவிச்சா தான் புரியும்..அப்படி பார்க்க போன எனக்கு தலைவருக்கு intro  இல்லாம போனது கொஞ்சம் வருத்தம் தான் ஆனாலும் படம் பார்த்து முடியும் போது அந்த வருத்தம் எனக்கு தெரியல.
ரஜினி கண்டுபிடிக்கிற எந்திரனுக்கு உணர்வுகளை ப்ரோக்ராம் பண்ணுறது அதனால் சந்திக்கிற விளைவுகளும் தான் கதை. அதை ஷங்கர் எடுத்திருக்கும் விதம் ஷங்கரால் மட்டுமே முடிந்த வித்தை. ஆரம்பத்தில ரோபோ செய்யும் குறும்புகள் வெகுவாக ரசித்தேன். முக்கியமா மனுஷன் கிட்ட இருக்கிறது ரோபோ கிட்ட இல்லாதது அப்புடின்னு சந்தானம் வம்புக்கு இழுத்தது...(அதுதான் feeling) ரோபோ அதை அப்பிடியே விஞ்ஞானி ரஜினிகிட்ட ரோபோ கேக்குறது அப்படி அங்கங்க நகைச்சுவை சாரல். சுஜாதாவோட வசனங்கள் இந்த படத்தில சுஜாதா பாதியில் இல்லாமல் போனது தெரிஞ்சது.

என்னை பொறுத்தவரை ஒரு இயந்திரனுக்காக கவலைப்பட வைத்ததும் பின்பு கோபப்பட வைத்ததும் மீண்டும் இறுதியில் கவலைப்பட வைத்ததும் என ஷங்கரின் திரைக்கதை வித்தை காட்டியிருக்கிறது..இடைவேளைக்கு பின் வரும் காட்சிகளில் நான் ஒன்றிப்போனது  எனக்கு புரிந்தது எப்போதென்றால் என் பின் இருக்கையில் அமர்ந்தவர்கள் என்னை சாய்ந்து உட்காரும் படியும் அவர்களால் பார்க்க முடியவில்லை என்றும் சொன்ன போதுதான்.

தீ விபத்தின்போது ரோபோ காப்பாற்றும் காட்சிகளாகட்டும், ரஜினி ரோபோவை அழிக்கும் காட்சிகளாகட்டும், ரோபோ ஐஷுக்காக நகை வாங்கும் காட்சிகளாகட்டும், இறுதியில் வில்லனாக மாறிய பின் வரும் காட்சிகள் எல்லாம் என் மனதை ஏதோ செய்தன என்பது உண்மை. ரஜினி ரோபோவாக இருந்ததால நான் பீல் பண்ணினேனா இல்லாட்டி ரோபோவுக்காக பீல் பண்ணினேனா அப்பிடியெல்லாம் ஆராஞ்சு பார்க்க இஷ்டமில்லை. இன்னொரு விஷயம் ரஜினியை தவிர இந்த படத்துக்கு வேற யாரும் பொருத்தமா இருந்திருப்பாங்கன்னும் எனக்கு தோனல.

கொஞ்சம் இங்கிலிஷு படம் பார்க்கிறவங்க வேணுமெண்டா இது அந்த படம் மாதிரி, இந்த படம்  மாதிரி அப்புடின்னு சொல்லலாம். அந்த அதிமேதாவிங்களுக்கு நான் சொல்லுறது என்னான்னா எந்த படமும் இந்த படம் மாதிரி இல்லை. தலைவர் தனியா கலக்கி இருக்காரு. ஆனால் என்னை ஏமாற்றிய விஷயம் பாடல்கள். ஷங்கர்கிட்ட இருந்து இன்னும் வித்தியாசமா பாடல்களை எதிர்பார்த்தேன்..அவர் முன்னைய படங்களில் பாடல்களுக்கு எடுத்த சிரத்தையை விட இதற்கு கொஞ்சம் குறைவு என்று தான் தோன்றுகிறது. ஒருவேளை படக்காட்சிகளில் அவர் கவனத்தை செலுத்தியதால் இதை கவனிக்காது விட்டிருந்திருக்கலாம்.

ஒவ்வொரு மனுஷனுக்கும் ரசனை வேறுபடும், என்னை பொறுத்தவரை இந்த படம் கண்டிப்பா ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்தும். சந்திரமுகியில எப்புடி கடைசியா வேட்டையனா வந்து கலக்குவாரோ அப்பிடியே தான் இங்க வில்லன் ரோபோ. அந்த படத்தை ரசிச்ச ரசிகர்கள் கண்டிப்பா இந்த படத்தையும் ரசிப்பாங்க.

படத்தில பின்னணி இசை சொல்லவே தேவையில்ல, நம்ம ரஹ்மான் கலக்கிட்டாரு. ஒளிப்பதிவு ரத்னவேலுவுக்கு இது ஒரு மைல் கல். அந்தோணியின் படத்தொகுப்பு விறுவிறுப்பை  கூட்டியிருக்கு. படம் பார்த்துகொண்டிருக்கும்போது ஒரு சில இடங்களில் நான் மட்டுமே சிரித்துக்கொண்டிருந்தேன். அப்போ தான் புரிஞ்சுது அது கொஞ்சம் technical related அதுதான் நிறைய பேருக்கு புரியலன்னு.கிளைமாக்ஸ் ல ரோபோக்கள் magnetic force உதவியோட ஒன்னு சேர்ந்து தாக்கும்போது விஞ்ஞானி worm அனுப்புறதும் பிறகு magnetic force disable பண்ணுறதும் நிறைய பேருக்கு புரியல போல. ஏன்னா பின்னால ஒருத்தன் சொன்னது கேட்டுச்சு என்னடா 2 முறையும் ரோபோ சாகலையான்னு. அதை கொஞ்சம் ஷங்கர் தவிர்த்திருக்கலாம், ஆனால் அது முடியாத காரியமுன்னு தெரியும். எது எப்படியோ படத்தை இன்னும் குறைஞ்சது 2 தடவையாவது பார்க்க சொல்லுது மனசு. அப்படி பார்த்தா  இன்னும் விஷயங்கள் ரசிக்கலாம்.

படம் கண்டிப்பா போய் தியேட்டர் ல பாருங்க. இன்னும் எழுத நிறைய விசயம் இருக்கு..பார்ப்போம் அடுத்த ஷோ பார்த்துட்டு தொடருறேன்..!