Wednesday, September 23, 2009

முற்பகல்

பரபரப்பான ஒரு நாள், அதுவும் நடைபாதையில் நடந்து போகக்கூட சிரமத்தை சந்திக்கும் ஒரு நேரம்.  ஒரு காலை நேரத்தில் இலங்கையிலேயே பரபரப்பான சுறுசுறுப்பான ஒரு நகரத்தில் சன நெருக்கடிக்கு மத்தியிலும் அந்த குரல் கேட்டுக்கொண்டிருந்தது. "அம்மா தாயே பிச்சை போடுங்கம்மா" இதுதானே பிச்சைக்காரர்களின் தாரக மந்திரமாக இருக்க முடியும். அனால் அந்தக்குரல் அப்படியல்ல. சொல்லப்போனால் அது குரலே அல்ல. அது சில்லறைக்காசு குலுக்கப்படும் சத்தம். வாய் திறந்து எதாவது ஒரு மொழி பேசினால் மற்றைய மொழிக்காரர்கள் உதவ மாட்டார் என்று இந்த நாட்டின் நிலையை நன்றாகவே புரிந்துகொண்டதால் அவனுக்கு பேசி அவனது வசூலை குறைத்துக்கொள்ளும் இஷ்டம் இல்லை.

மங்கலான மேலாடை அழுக்கு படிந்திருந்தது. குளித்து வருடங்கள் ஆகியிருக்கலாம். அவனுக்கெங்கே பணம் கிடைக்கப்போகிறது இங்கு நம்மில் சிலர்போல்  வாசனைத்திரவியம் அப்பிக்கொண்டு குளிக்காமலே காலம் கடத்த. அவன் குளித்திருக்க மாட்டான் என்று பார்க்கும்போதே தெரிந்தது.  இங்கு இருக்கும் ஷாம்பூ கம்பெனிகளுக்கு ஒரு சவால். அவனை குளிப்பாட்டி அவன் தலைமுடியை நேர்த்தியாக சீவிவிட முடியுமானால்  காலம் முழுவதும் அந்த கம்பனிக்கு சம்பளம் இல்லா குறியீட்டுத்தூதுவர் ஆகலாம். (அதுதான்பா BRAND AMBASSADOR). தொட்டால் கையை கிழிக்கும் கூர்மையில் அவனது தலைமுடி. Loreal, Godrej (அவ்வளோ தான் எனக்கு தெரிஞ்ச பெயர்கள்) இன்னபிற நிறப்பூச்சுக்கள் அவனது தலையை அலங்கரிக்காமலே செம்பட்டை அடித்திருந்தது. ரஜினி கலர் அவனது உடல் ( எனக்கும் ரஜினிக்கும் எந்தக்கோபமும் இல்லை ). மருதநாயகம் கமல் போல தாடி. பிச்சைக்காரனாக இருந்தும் ஒரு முச்சக்கரவண்டிக்கு அவன் சொந்தக்காரன்.அந்த வண்டியில் தான் அவனது பயணமெல்லாம். அது வீதியில் ஓடும் முச்சக்கர வண்டியல்ல, நடைபாதையில் ஓடும் வண்டி. பாவம் அவனுக்கு மூட்டுக்குக்கீழ் கால்கள் இல்லை. அவன் கால்களை இழந்து மிகவும் அதிக காலம் ஆகியிருக்க வேண்டும்.  ஒரு முக்கோண வடிவப்பலகையில் மூன்று முனைகளிலும் மூன்று சிறிய இரும்புச்சில்லுகள் பூட்டப்பட்ட வண்டி அவனது BMW.  அதனை ஓட்டுவதற்கு அவன் எங்கும் அனுமதிப்பத்திரம் பெற்றிருக்கவில்லை. எங்கும் பயிற்சியும் எடுக்கவில்லை. கைகளிரண்டையும் தரையில் வைத்து பின்புறமாக தள்ளும் போது முன்னோக்கி நகர்ந்தது அவனது வண்டி. நியூட்டனின் கண்டுபிடிப்பு இப்படியெல்லாம் உதவுகிறது போலும். இடையிடையே அவனது மஞ்சள் நிற கோப்பையில் உள்ள சொச்ச சில்லறைகளை குலுக்கியவாறு ஒலிஎழுப்பி அவன்பால் பாதசாரிகளின் கவனத்தை ஈர்க்க முனைந்தான் எவ்வளவாவது தேறாதா என்ற எதிர்பார்ப்போடு....

அது காலை நேரமென்பதால் வேலைக்கு செல்வோர் தான் அதிகம் அந்த புறக்கோட்டை வீதியில். நடைபாதை இருமருங்கிலும் பெட்டிக்கடைகள் பெரியக்கடைகள் என அப்போதுதான் திறக்கப்பட்டுகொண்டிருந்தன வியாபாரத்துக்காக. சில இடங்களை தாண்டிச்செல்லும்போது  ஊதுபத்தி , சாம்பிராணி, கற்பூர வாசனை எல்லாம் நுகர்ந்துகொண்டு செல்லவேண்டியிருந்தது. அந்த காலைப்பொழுதையும் இன்னும் மங்களமாக்கின அவை. ராகுலும் சதிஷும் அவர்களது அலுவலகத்துக்கு செல்ல அந்தச்சாலையில் தான் வந்துகொண்டிருந்தார்கள். ராகுலின் உடம்பை இளம் நீலநிற மேற்சட்டையும் கருப்பு நிற நீளக்காட்சட்டையும் மறைத்திருந்தன. பாதங்கள் கருப்பு நிற சப்பாத்துக்குள் ஒளிந்துகொண்டிருந்தன. மாநிறம் என்று சொல்லக்கூடிய முகம். தலை மயிர் கீழிருந்து மேலாக சீவப்பட்டு  உச்சியில் குவிக்கப்பட்டுருந்தது கோபுரம் போல. அலுவலகம் கொஞ்சம் கண்டிப்பானது என்பதால் முகத்தில் அரும்பு  மீசைகூட எட்டிப்பார்க்கவில்லை. வெள்ளைநிற அரைக்கை சட்டையும் சாம்பல் நிற நீளக்காட்சட்டையும் கருநிற சப்பாத்தும் பக்கவகிடெடுத்த தலைமுடியுமாக இருந்தான் சதீஷ். கருப்பு நிறமாக இருந்தாலும் அவன் நெற்றியில் அவன் தினமும் இடும் விபூதி ஒரு சாந்தமான தோற்றத்தை கொடுத்திருந்தது அவனுக்கு.


" டேய் ராகுல் நான் bet பிடிச்சமாதிரியே நேத்து India win பண்ணிடுச்சு. so இன்னைக்கு என்னோட பகல் சாப்பாட்டுக்கு நீ தான் sponsor. நான் எங்க கூப்பிடுறேனோ அங்க தான் நீ எனக்கு வாங்கித்தர்ற ஓகே?" என்று சந்தோஷத்தோடு கூறிக்கொண்டு வந்தான் சதீஷ்.

" ஏன்டா நீ வேற காலைலேயே மனுஷன்ட வைத்தெரிச்சல கிளப்புற? நானே அத மறக்கணும்னு try பண்ணிட்டு இருக்கேன். நீயும் வெறுப்பேத்தி mood ஐ குழப்புற. உனக்கு சாப்பாடு தானே வேணும், நான் வாங்கி தாரேன் போதுமா? இப்போ அத பத்தி பேசாத" என்று சலித்துக்கொண்டான் ராகுல்.

" நாங்க தோற்கும்போது மட்டும் நீங்க பேசுவிங்க, நீங்க அடி வாங்கினா நாங்க பேசக்கூடாதோ..?? சரி சரி விடு மச்சி இதெல்லாம் வாழ்க்கைல சகஜம் " என்று சற்று கிண்டல் கலந்த தொனியில் ஆறுதல் படுத்தினான் சதீஷ். அவர்கள் இருவரும் அந்த சன நெருக்கடி தெருவுக்குள் புகுந்த வேளையில் முன்னால் அந்த பிச்சைக்காரன் அவனது தொழிலை மும்முரமாக செய்துகொண்டிருந்தான்.

எதேச்சையாக அந்த பிச்சைக்காரனை தூரத்திலேயே கண்டுவிட்ட ராகுல் " ஏன்தான் இவனெல்லாம் உயிரோட இருக்கானோ. இவ்வளோ கஷ்டபடுரதுக்கு நானா இருந்தா தூக்குப்போட்டு  எப்பவோ செத்திருப்பேன்" என்று கூறினான்.

" ஏன்டா அப்படி பேசுற , அவங்களும் வாழணும்டா , கடவுள் எல்லாருக்கும் ஒரு வேலை கண்டிப்பா வச்சிருப்பார்" என்று எதோ நினைத்துக்கொண்டு கூறினான் சதீஷ்.

"இவனுங்க எல்லாம் ஆடின ஆட்டத்துக்கும் பண்ணின பாவத்துக்கும் தான்டா இப்போ இப்படி அனுபவிக்குறானுங்க, இவங்கள எல்லாம் பாவமே பார்க்க கூடாது" என்று அவனது உள்மனக்கருத்தை வெளிப்படுத்தும்போது அவர்களிருவரும் அவனை அண்மித்திருந்தார்கள். இவர்களது சம்பாஷனை அவனை பற்றித்தான் என அறிந்துகொள்ள அவனொன்றும் கடவுள் இல்லையே. வழக்கம்போல அவர்களிடமும் அவனது கோப்பையை குலுக்கி நீட்டினான். அவனை இருவரும் பொருட்படுத்தாமல் கடந்து சென்றனர். திடீரென்று என்ன நினைத்தானோ சதீஷ் திரும்பி வந்து அவனது கோப்பையில்  5 ரூபா குற்றியை போட்டுவிட்டு திரும்பினான். அந்த பிச்சைக்காரனுக்கு அன்றைய பொழுதில் கிடைத்த முதல் 5  குற்றி அது.

அதுவரை பக்கத்தில் சதீஷ் வருகிறான் என்ற நினைப்பில் தனியாக கதைத்துக்கொண்டு சென்ற ராகுல் அந்த முச்சந்தியில் வீதியை கடக்கும் முன்தான் சதிஷை திரும்பிப்பார்த்தான். பக்கத்தில் அவனில்லை. ஒரு 10 அடிக்குப்பின்னால்  சதிஷ் வந்துகொண்டிருந்தான்.

ராகுல்..............!!!!!!!!!

சத்தமாக கத்தியபடியே ராகுலை நோக்கி ஓடினான் சதீஷ். ஒருநொடியில் இதுவரை அருகில் நன்றாக பேசிக்கொண்டு வந்தவன் கீழே ரத்த வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்தான். சதிஷின் கண்களுக்குள் இன்னும் நடந்தவை மீள் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தன. என்ன செய்வதென்று புரியாமல் கீழே முனங்கிக்கொண்டிருந்தவனை ராகுல் ராகுல் என எழுப்பிக்கொண்டிருந்தான் சதீஷ் .

அந்த முச்சந்தியில் பிரதான பாதையிலிருந்து வேகமாக திரும்பிய ஒரு லாரியில் மோதித்தான் ராகுல் அப்படி விழுந்து கிடந்தான். சந்தோஷப்படவேண்டிய ஒரே விடயம் அவன் உயிர் இன்னும் உடலில் இருந்தது. அந்த சம்பவம் நடந்து சில நொடிகளிலேயே கூட்டம் கூடிவிட்டது. சிலர் லாரி சாரதியை பச்சை பச்சையாக திட்டிக்கொண்டிருந்தனர். சிலர் அவனை அடிக்கவும் கூடிவிட்டனர். என்ன செய்வதென்று தெரியாமல் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் சதீஷ் ராகுலை  எழுப்ப முயன்றுகொண்டிருந்தான். வண்டிச்சாரதி அந்த கூட்டத்திலிருந்து தப்பித்து போலிசுக்கு ஓடிவிட்டான் தன்னுயிரை காத்துக்கொள்ள. போலிஸ் அந்த இடத்துக்கு வரும்வரை ஒன்றும் பண்ண முடியாது என்றாகிவிட்டது. போலிஸ் என்று கேள்விப்பட்டதும் கூட்டமும் மெதுவாகக் கலையத்தொடங்கியது. ராகுல் அப்படியே கிடந்தான். சதீஷ் அவனை எழுப்பிக்கொண்டேயிருந்தான்.

அதுவரை அந்தக்கூட்டதையோ அந்த விபத்தையோ கண்டு அலட்டிக்கொள்ளாத அந்த பிச்சைக்காரன் அப்படியே அவனது இடத்திலிருந்து நகர்ந்து அருகில் இருக்கும் telephone booth க்கு சென்றான். அவன் கோப்பையிலிருந்த அந்த ஒரே 5 ரூபா குற்றியை எடுத்து கையில் வைத்துக்கொண்டான். வீதியில் போய்க்கொண்டிருந்த ஒரு பள்ளிச்சிறுவனை அழைத்து கையில் இருக்கும் குற்றியை அவனிடம் கொடுத்து அந்த booththil  ஒட்டியிருக்கும் விளம்பரத்தில் உள்ள St John Ambulance  இலக்கத்திற்கு தொடர்பை எடுத்துத்தருமாறு  கேட்டான். சிறுவனும் சொன்னதுபோல் செய்து receiver ஐ அவனிடம் கொடுத்தான்.

"ஹலோ சார் மல்வத்த பாரே accident  ஏகக். விககாட என்ட. சுட்டாக் பரபதலை. ( ஹலோ சார் மல்வத்தை வீதியில ஒரு விபத்து, சீக்கிரமா வாங்க கொஞ்சம் ஆபத்து) " என்று தன் பாஷையில் கூறிவிட்டு receiver ஐ அந்தச்சிறுவனிடம் கொடுத்தான். சிறுவனும் அதை தொலைபேசியில் செருகிவிட்டு நகர்ந்தான்.

தனது கோப்பையில் அதுவரை சேர்ந்த சில்லறைகளை கணக்கிட்டு அவனது பையில் போட்டுவிட்டு 2,3 சில்லறைக்காசுகளை மட்டும் கோப்பையில் விட்டுவிட்டு மீண்டும் தான் தொழிலை தொடங்கினான் அந்தப் பிச்சைக்காரன் அவ்விடம் விட்டு நகர்ந்தபடி.................!

No comments:

Post a Comment